X

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு – ரஷ்ய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் (சுமார் ரூ.13 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார். இந்த உத்தரவு புதிதல்ல. இரண்டாம் உலகப்போரின்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 1944-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இது. பனிப்போரைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியன் உடைந்தபின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை எடுத்து தூசி தட்டி மீண்டும் புதின் அமல்படுத்தி உள்ளார்.

ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் 1990-களில் இருந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2000-ம் ஆண்டு ரஷிய அதிபராக புதின் பதவி ஏற்ற பின்னர் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது. மக்கள் தொகையை பெருக்குவதற்கு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

2018-ம் ஆண்டு மக்கள் தொகை 14.7 கோடியாக இருந்தது. இது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை சேர்த்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இணைப்பு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத நிலையில், 85 ஆயிரம் குறைந்தது. 2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று, உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம். இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து ரொக்கப்பரிசு வழங்கும் சோவியத் கால திட்டத்தை மறுபடியும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.