Tamilசெய்திகள்

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றிய மீனவர்கள் – நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர்

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை தொடங்கி நேற்று வரை பெய்தது. வரலாறு காணாத இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பேய்மழை தொடங்கியதில் இருந்தே மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நெல்லையில் முகாமிட்டு வெள்ளத்தின் நிலவரத்தை கண்காணித்து வந்தார். அவருடன் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஆவுடையப்பன், மைதீன்கான் ஆகியோரும், நிர்வாகிகளும் இருந்து வெள்ளத்தை பார்வையிட்டனர்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக சென்று பார்வையிட்டு வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தற்போதும் இன்று காலை முதலே வெள்ளம் வடியாமல் உள்ள சில இடங்களில் ஆய்வு செய்து அதனை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் பாளை வ.உ.சி. மைதானத்தில் தங்கி உள்ள மீனவ பெருமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மாநகர பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலமாக தான் மீட்க முடியும் என்ற நிலை வந்ததும், மக்களை மீட்பதற்காக உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 பைபர் படகுகளுடன் சுமார் 400 மீனவர்கள் அங்கு வந்ததற்கு நன்றி கூறினார்.

மேலும் தங்களது உயிரினை துச்சமாக கருதி மீட்பு பணியில் ஈடுபட்டு சந்திப்பு, கொக்கி ரகுளம், சிந்துபூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன்மகா தேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வெளியேற முடியாமல் வீடுகளில் மேல் தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டதற்கு நன்றி கூறினார். அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் உடன் இருந்தனர்.