Tamilசெய்திகள்

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றூண்டு உணவு தயாரிக்க 5 அம்மா உணவகங்கள் தேர்வு

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு மும்முரமாக நடக்கிறது. தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் முதலில் காலை உணவு திட்டம் வட சென்னை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலங்கள் 1, 3, 4, 5 ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2 சமையல் கூடம் எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

5 அம்மா உணவகங்களில் இருந்தும் ஒரு பள்ளியில் இருந்தும் உணவு தயாரித்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டு உள்ள இந்த இடங்களில் இருந்து மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று கருதப்படுகிறது.

காலை உணவு தயாரிக்க தாழங்குப்பம் அம்மா உணவகம், அன்னை சிவகாசி நகர், மாதவரம் புதிய பஸ் நிலையம், ஜெ.ஜெ.நகர், எஸ்.என்.ஷெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகங்களிலும் ஆறாநகரில் உள்ள பள்ளிகூடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு விசேஷ சமையல் கூடம் இதற்காக அமைக்கப்படுகிறது. அம்மா உணவக தற்போதைய சமையல் கூடத்தை பயன்படுத்தாமல் காலை சிற்றுண்டிக்காக தனி சமையல் கூடம் கட்டப்படுகிறது. அதுபோல உணவு பொருட்களை பாதுகாத்து வைக்க தனி அறையும் அமைக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் திட்டம் தனியாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் அம்மா உணவகத்திற்கும் தொடர்பு இல்லை. தனித்தனியாக சமையல் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. சமையல் பணியில் 20 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அம்மா உணவகங்களில் பணிபுரியும் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள். உணவு தயாரிக்கக் கூடிய நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் சமையல் கூடம் அமைக்கும் பணி தொடங்கும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என்பதை அரசு தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.