1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டு வழங்கும் திட்டம் சோதனை முறையில் தொடக்கம்
நகரப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு வருவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது. இதற்கு பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமின்றி சிலருடைய குடும்ப சூழலும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை செயல்படுத்த அரசு தற்போது ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளிலும் தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கியாஸ் சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு போன்றவை வழங்கப்படும். சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக்குழுவுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும். காலை 5.30 மணிக்கு சமையல் பணியை தொடங்கி காலை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும். சமைத்த உணவை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.