ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட 3 பேர் கைது
டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுவதுடன் அந்த பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடித்து அத்துமீறுவது போன்றும், அந்த நபர்களின் பிடியில் இருந்து இளம்பெண் தப்பிக்க முயல்வது போன்றும், அந்த பெண்ணை ஒருவர் கன்னத்தில் அறைவது போன்றும் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில், உடனடியாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பஹர்கஞ்ச் என்ற இடத்தில் ஜப்பானிய இளம்பெண் மீது இந்த துன்புறுத்தல் நடந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வீடியோ மூலம் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணை துன்புறுத்தியதாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக துணைபோலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சைன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பவம் தொடர்பாக எந்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்தும் புகார்கள் வரவில்லை. அதே நேரம் சம்பந்தப்பட்ட பெண் குறித்த விபரங்களை அறிய உதவுமாறு ஜப்பானிய தூதரகத்திற்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண் ஜப்பானிய சுற்றுலா பயணி என்றும், டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் தங்கியிருந்த அவர் தற்போது வங்கதேசத்திற்கு சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.