Tamilசெய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் நன்மையும், தீமைகளும்

இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும்.

அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு 4 ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு கார்பன் அணுவும் சேர்ந்திருந்தால் அது மீத்தேன். 2 கார்பன் அணுவும், 6 ஹைட்ரஜன் அணுவும் கலந்திருந்தால் அது ஈத்தேன்.

இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. நிலத்திற்கு அடியில் இந்த அனைத்து வகை எரிபொருள்களும் கலந்திருக்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள்.

பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றன.

இவற்றை தோண்டி எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய முடியவில்லை. எனவே தனியாருக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 1000 மீட்டரில் இருந்து 5000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. அவற்றை தோண்டி எடுக்கவேண்டுமானால் ராட்சத வடிவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். செங்குத்தாகவும், குறுக்கு நெடுக்குமாகவும் இந்த கிணறு அமைக்கப்படும்.

அப்போது பாறை இடுக்குகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேறும். இதற்காக உள்ளுக்குள் தண்ணீர் அல்லது வாயுக்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது வெளியே வரும் வாயுக்களை கலன்களில் சேமித்து அவற்றை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தரமான ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு அவை எரிபொருள்களாக பயன்படுத்தப்படும்.

பொதுவாக நமது நிலப்பரப்பில் மீத்தேன் வாயுதான் அதிகமாக பரவி உள்ளது. கிட்டத்தட்ட 90-லிருந்து 95 சதவீதம் வரை மீத்தேன் எடுக்கப்படும். இதற்காகத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

1000 மீட்டரில் இருந்து 3000 மீட்டர் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர். அப்போது அங்கு தேங்கி இருக்கும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேற தொடங்கும். அந்த இடுக்குகளில் நிலத்தடி நீர் சென்றுவிடும்.

உதாரணத்திற்கு தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீட்டரில் இருந்து 400 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது 1000 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்குள் இந்த தண்ணீர் புகுந்துவிடும்.

அதாவது மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளில் இருந்து பெருமளவு தண்ணீரையும் வெளியேற்றுவார்கள்.

இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இவை காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும்.

மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். செடி, கொடிகள் என இயற்கைகளையும் நாசமாக்கிவிடும்.

விவசாயம் இல்லாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதி ஆகியவற்றில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *