ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வெளிநடப்பு

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை முன்னிட்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர்களை என்ன காரணத்துக்காக அமலாக்கதுறை சோதனை செய்து கைது செய்கிறது. இதுவரை அமலாக்கத்துறையால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கிறது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:-

சம்பாய் சோரன் பதவிப் பிரமாணம் செய்ய ஏன் இவ்வளவு நேரம் ஆனது. கவர்னர் அலுவலகத்தை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்தியது என்பதை இது காட்டுகிறது. போராடுபவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் ரிங்கு கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்று அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் இதுவரை அமலாக்கதுறை எதையும் தெளிவுப்படுத்தவில்லை. எனவே இதை கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இன்று பா.ஜ.க.-வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news