X

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்தி பெயர்! – ப.சிதம்பரம் கண்டனம்

நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்தப் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல், “என்னிடம் விசாரணையின்போது, சோனியா காந்தி பற்றி கேள்வி எழுப்பினால், அதை நான் எப்படி எதிர்கொண்டு பதில் அளிக்க வேண்டும்?” என்று தனது வக்கீல்களிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த தகவலை டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை வெளியிட்டது. இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், ஊடகங்களும் தங்கள் வழியை கொண்டுள்ளன என்கிறபோது, இந்தியாவில் வழக்குகளின் விசாரணை, டெலிவிஷன் சானல்களில்தான் நடைபெறும். குற்றவியல் நடைமுறைச்சட்டமும், சாட்சிய சட்டமும் பொருந்தாது.

அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் என்ன சொல்கிறதோ அது வாய்வழி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் எந்தவொரு துண்டுக்காகிதத்தை அளித்தாலும் அது சான்று ஆவணமாக கொள்ளப்படும். டி.வி.சானல்கள் என்ன சொல்கின்றனவோ, அவை தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.