ஹெட்மயரால் தான் சதம் அடித்தேன் – ராஜஸ்தான் வீரர் பட்லர்
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 183 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பட்லர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
இந்த சதத்தின் மூலம் பட்லர் தன்னுடைய 6-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100-வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ராஜஸ்தானுக்கு அதிக ஆட்டநாயகன் (11) விருது வென்ற வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.
இந்நிலையில் அந்த தருணத்தில் சிக்சர் அடிப்பதற்கு ஹெட்மயர் செய்த உதவி பற்றி ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. உண்மையாக அவர் தான் நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். எனவே ஸ்டம்புகளுக்கு குறுக்கே சென்று பந்தை அந்த பகுதியில் அடியுங்கள் என்று என்னிடம் கூறினார்.
சில நேரங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் உங்களுடைய தலையை பல்வேறு விஷயங்கள் அதிகமாக சுற்றும். ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது. அங்கே அனைவரும் நீங்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றி இந்த சீசனை நன்றாக துவங்குவதற்கு வாழ்த்துகின்றனர்.
இவ்வாறு பட்லர் கூறினார்.