X

ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ரூ.14 கோடி நிதி

இந்தியாவுக்கு வெளியே 30 இடங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. மேலும் 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கு தமிழக அரசு முயற்சித்து வருகிறது. தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாயும், மீதமுள்ள 40 கோடி ரூபாய் 9,600 தமிழர்களாலும் அளிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு என்ற ஒரு அமைப்பு உள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழர்களால் இது 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பினர், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதியை திரட்டி வருகின்றனர்.

தமிழ் மொழியை கற்பிப்பதற்கும், பண்டைய தமிழ் இலக்கியங்கள், மற்றும் தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை ஆராயவும் தமிழ் இருக்கைகள் பெரிதும் உதவியாக உள்ளன.

இந்நிலையில், ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பானது, 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி) நிதி திரட்டி உள்ளது. அந்த நிதியை விரைவில் பல்கலைக்கழகத்திற்கு வழங்க உள்ளது.

இது குறித்து ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு இயக்குநர்கள் கூறுகையில், “அமெரிக்காவில் 2 லட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழ்-அமெரிக்க குடும்பங்கள் இந்த மாபெரும் தேசத்தில் பல கலாச்சார சமுதாயத்தின் துணையோடு இணைந்திருக்கின்றன. எங்கள் குழந்தைகள் அனைவரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும்போது, உயர் நிலையில் உள்ள தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் இலக்கியம் பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சியை முன்னெடுப்பதில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பு பெருமிதம் கொள்கிறது,” என்றனர்.

தமிழ் இருக்கை மூலம் கல்வித் திட்டங்களை வளப்படுத்தவும், மாணவர்களை தமிழின் சிறப்பு மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்கு அறிமுகப்படுத்தவும் முடியும் என ஹூஸ்டன் பல்கலைக்கழக மேம்பாட்டுத்துறை துணை வேந்தர் எலாய்ஸ் பிரைஸ் கூறினார்.