ஹீரோவானது ஏன்? – நடிகர் சூரி விளக்கம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் சூரி அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகன் ஆகிறார். விரைவில் 100வது படத்தை தொட இருக்கும் அவர் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை, சங்கத்தமிழன் என 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. அவர் அளித்த சிறப்பு பேட்டி:- கவுண்டமணி – செந்தில், வடிவேலு, சந்தானம் போல எனது படங்களில் டிராக் காமெடி இல்லாதது எனக்கு பெரிய வருத்தம். அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.
டிராக் காமெடி தான் நம்மை நன்றாக அடையாளப்படுத்தும். படத்தின் வெற்றி தோல்வி காமெடியனை பாதிக்காது. படங்களையே கூட பல சமயம் காமெடி டிராக் காப்பாற்றும். இப்போது ஹீரோவுடனேயே பயணிக்கும் கேரக்டர் என்பதால் கதையை சார்ந்து தான் காமெடி கொடுக்க முடிகிறது. தேதிகளும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இது குதிரைக்கு கடிவாளம் போட்டது போல. ஒரு காமெடி வெற்றி அடைய முக்கிய காரணமே இயக்குனர் தான். ஆனால் இயக்குனர் சொன்னதை மட்டுமே அப்படியே பேசிவிட்டு செல்ல முடியாது. அதை டெவலப் செய்தால் தான் நன்றாக இருக்கும். எனவே மெருகேற்றுவது எனது வேலை. இயக்குனரை மீறி நாம் காட்சியை உருவாக்க முடியாது. ஆனால் கொடுக்கப்பட்ட காட்சிக்குள் என்னால் முடிந்ததை செய்கிறேன்.
4, 5 ஆண்டுகளாகவே ஹீரோ வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் மறுத்து வந்தேன். வெற்றி அண்ணன் அழைத்த உடன் முதலில் நம்பவில்லை. அழைத்து ஒருவரி கதை சொன்ன உடன் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சிவகார்த்திகேயனிடம் சொன்னேன். உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தார். ஜனவரியில் படப்பிடிப்பு செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.