இளசுகளின் பேவரைட் ஹீரோவாக உருவெடுத்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘அன்பறிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் (Disney Plus Hotstar) நேரடியாக வெளியாகிறது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அஷ்வின், விருது நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்களை இயக்கியிருப்பதோடு, பல பிரமாண்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
இதில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், அர்ஜய், சரத் ரவி, தீனா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, விதார்த் வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் அஷ்வின், “முழுக்க முழுக்க குடும்படமாக அவர்கள் கொண்டாடி பார்க்கும் படமாக இப்படத்தை எடுத்துள்ளோம். நான் மியூசிக் ஆல்பம் செய்த போது என்னுடன் இருந்த குழு தான் இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்கள். படத்தில் ஒரு மிகப்பெரிய செய்தி இருக்கிறது அதை குறிப்பிடும் விதமாக தான், இந்த டைட்டிலை வைத்தோம். அன்பே அறிவு என்பது தான் அன்பறிவு என மாறியது. இது ஏற்கனவே வந்த கதை என எல்லோரும் சொல்வதை நாங்களும் கேட்டோம். இது அது போல் வழக்கமான கதை தான் ஆனால் அதைதாண்டி பல ஆச்சர்யங்களும் இப்படத்தில் இருக்கும். தியேட்டரில் படம் வரவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது. ஆனால் படம் எல்லோரையும் போய் சேர வேண்டும் எனும்போது ஓடிடி தான் சரியான வாய்ப்பு என தோன்றியது.” என்றார்.
நடிகர் ஹிப் ஹாப் ஆதி படம் குறித்து கூறுகையில், “இந்தப்படத்தில் காமெடியை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இருக்கும். முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நெப்போலியன் சார், விதார்த் சார் முக்கிய பாத்திரங்கள் செய்துள்ளார்கள். ஒரு கிளாசிக் கதை, அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்து தான் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் மியூசிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். அஷ்வின் என்னைப்போலவே மியூசிக் இயக்குநராக இருந்து வந்தவர். 13 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறார். மிக அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் போல் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த கதையில் வந்திருக்கிறது. அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்போட இருக்கிறது தான் என்பதை தான் இப்படம் சொல்கிறது. விதார்த் சார் ஒரு அட்டகாசமான ரோல் செய்திருக்கிறார். வழக்காமான சினிமாவில் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்திருக்கிறோம். இரட்டை வேடம் செய்தது சவலாக இருந்தது. நமக்கான கனவுகள் சாத்தியமாகும் போது கஷ்டப்படவும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பதே எனது கனவு தான், அதில் இரட்டை வேடம் நடிப்பது வரம் தான். 5 படங்களுக்கு செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.” என்றார்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்ய, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிரதீப் தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.