Tamilசெய்திகள்

ஹிஜாப் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா கருத்து

 

காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்ப்பதற்காக அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப் படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை பார்ப்பது தொடர்பாக அரசு ஊழியர்கள் முன் கூட்டியே தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அசாமில் இந்து, முஸ்லிம்கள் என பாகுபாடுயில்லாமல் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காஷ்மீருடன் ஒப்பிடும் போது அசாம் சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என முஸ்லிம்கள் நினைக்க கூடாது என்றார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான சீருடை இருக்க வேண்டும் என்றும் தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.