X

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்

உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘கங்குபாய் கத்யாவாடி’ படம் ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வொண்டர் வுமன் படத்தின் நாயகி கல் கடோட் மற்றும்ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இப்படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இயக்குனர் டாம் ஹார்பர் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.