X

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்

டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே.கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல்.கே.கணேசன் மற்றும் ஜி.பி.திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவின் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகரான நெப்போலியன், டெவில்’ஸ் நைட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. டிராப் சிட்டி ஹாலிவுட்டில் அவரது இரண்டாவது படம், இதில் அவர் ஒரு கனமான பாத்திரத்தை ஏற்றுள்ளார். கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற இன்னொரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், பிரபல நடிகருமாவார். டிராப் சிட்டி படம் அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்கிறது. அவர் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கஷ்டப்படும் ராப் பாடகர் ஒருவர் ஒரு போதை பொருள் கடத்தல் தலைவனிடம் பணியாளாக வேலை செய்யும் கதையே டிராப் சிட்டி. ராப்பராக நடிக்கும் ஜாக்ஸன் உருவாக்கும் ஒரு பாடல், அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு மாபெரும் வைரலாகி விடுகிறது. அவரது குற்றம் காரணமாக அவரது இசை புகழ் தீவிரமடைகிறது என்றாலும், ஒரு அபாயகரமான துப்பாக்கிச் சூடு அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய தேர்வை எதிர்கொள்ள அவரைத் தூண்டுகிறது.

சமீபத்தில் தலைப்புச் செய்தியாக வந்த காவல்துறை வன்முறை கதைகளுடன் ஒத்துப் போகக் கூடிய சம்பவங்களைப் பற்றி பேசுவதே இப்படத்தில் சிறப்பம்சம். அது மின்னியபாலிஸில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டாக இருக்கட்டும் அல்லது தமிழ்நாட்டு சிறையில் இறந்த தந்தை மகனாக இருக்கட்டும்.

டிராப் சிட்டி படத்தை இயக்கியிருப்பவர் ரிக்கி பர்செல். ஜாக்ஸன், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் தவிர்த்து எரிகா பிக்கெட், க்ளிஃப்டன் பாவெல், யுஹான் ஜோன்ஸ், டெனிஸ் எல்.ஏ.வொயிட் மற்றும் டாரினா படேல் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.