பிரபல ஹாலிவுட் நடிகரான டிராய் கோட்சர், தி நம்பர் 23, கோடா, யுனிவர்சல் சைன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ‘நோ ஆர்டினரி ஹீரோ: தி சூப்பர்டெபி மூவி’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் உள்ள மேசா நகரில் வசித்து வரும் டிராய் கோட்சர் கடந்த மார்ச் மாதம் கோடா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். ஆஸ்கர் விருது பெற்றதற்காக, அவருடைய சொந்த ஊரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்க தனது காரில் ஆஸ்கார் விருதை டிராய் கோட்சர் எடுத்து சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்து வந்தபோது ஆஸ்கார் விருதுடன் காரை சிலர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீஸ் விசாரணையில் இரண்டு சிறுவர்கள், அவரது காரை திருடி சென்றது தெரியவந்தது. பிறகு அவர்களை கைது செய்த போலீசார் காரையும், காருக்குள் இருந்த ஆஸ்கார் விருதையும் மீட்டனர்.