பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த “ஹேராம்” என்ற படத்தில் வல்லபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த “லக்” என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஏழாம்அறிவு’ என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் ‘ஸ்ருதி” என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. இவரது இசைத்திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் ‘தேவர் மகன்’ படத்தில் “போற்றி பாடடி பெண்னே” என்ற பாடலை பாட வைத்தார்.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலை பல்வேறு பாடகிகளுடன் ஸ்ருதி இணைந்து பாடியுள்ளார். இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. பல விருதுகள் பெற்றுள்ளார்.
2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், ‘சென்னை ஸ்டோரி’. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். டிமேரி என் முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகினார்.
இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். இதில் அனு என்ற பெயரில் ‘டிடெக்டிவ்’ வேடம் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் திடீரென இந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாக கூறப்படுகிறது. காரணம் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாக வில்லை.