கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.
இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.