X

ஹாங்காங்கில் தொடரும் போராட்டம்! – விமான சேவை பாதிப்பு

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.

ஆரம்பத்தில் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்த ஹாங்காங் நிர்வாகம் மக்களின் தொடர் போராட்டத்துக்கு அடி பணிந்தது. கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்தார்.

ஆனாலும் போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதிநாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணி நடத்தியும், அரசு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்து வருகிறது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது.

வார இறுதி நாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டங்கள் தற்போது வார நாட்களிலும் நடக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்று அதிகாலை முதலே மக்கள் வீதிகளில் பேரணியாக சென்றும், சாலைகளை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேபோல் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களுக்குள் புகுந்து ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தினர்.

அத்துடன் விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். இதனால் விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

போராட்டம் காரணமாக சாலை, ரெயில், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதால் ஹாங்காங்கில் இயல்பு வாழ்கை முடங்கியது.

நேற்றைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள் என பல தரப்பினர் கை கோர்த்ததாகவும், ஒட்டுமொத்தமாக சுமார் 5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நேற்றைய போராட்டம் ஹாங்காங் நிர்வாகத்துக்கு மிகுந்த தலைவலியாக அமைந்தது. போராட்டக்காரர்கள் ஹாங்காங்கின் நிலைமையை அபாயகரமான நிலைக்கு கொண்டு செல்வதாக கூறி தலைவர் கேரி லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்.