ஹர்திக் பாண்ட்யாவின் காயம் மிகப்பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில்இல்லை – கேப்டன் ரோஹித் சர்மா
புனேயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை ருசித்துள்ளது.
இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது காயம் அடைந்தார். அதன்பின் களம் இறங்கவில்லை. அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் காயம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா கூறியதாவது:-
வங்காளதேசம் அணிக்கு எதிரான வெற்றி சிறப்பானது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. முதலில் நாங்கள் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆனால் மிடில் ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை நம்முடைய பக்கத்திற்கு திருப்பினர். அனைத்து போட்டிகளிலும் பீல்டிங் சூப்பராக இருந்தது. இது வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விசயம். அவர்களின் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும். பந்து வீச்சாளர்கள் எந்த லெந்தில் பந்து வீச வேண்டும் என்று புரிந்து வைத்துள்ளனர்.
ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். கேட்ச் பிடித்தார். இருந்த போதிலும், சதத்தை உங்களால் முந்தி செல்ல முடியாது. ஒரு அணியாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வீரர்கள் அறையில் சிறந்த பீல்டருக்கு பதக்கம் வழங்குவது, உத்வேகம் அடைவதற்காகத்தான்.
ஹர்திக் பாண்ட்யா சற்று வலி இருப்பதாக உணர்கிறார். மிகப்பெரிய அளவில் கவலை அளிக்கும் வகையில் அவரது காயம் இல்லை. நாளை காலை (இன்று) அவர் எழுந்து நடக்கும் போது எவ்வாறு உணர்கிறார் என்று பார்க்க வேண்டும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடுவோம். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து ஆதரவு அளிக்கிறார்கள்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.