ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் விவகாரம்! – கங்குலி கருத்து
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதேபோல் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் லோகேஷ் ராகுல். இருவரும் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக்கு எதிராக கடும் கண்டன குரல் கிளம்பியது. இதனால் அணியில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் சர்ச்சையில் இருந்து நாம் கடந்து செல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘பொதுவாக வீரர்கள் சில தவறுகள் செய்யக்கூடும். நாம் அதன்கூட அப்படியே செல்ல வேண்டியதில்லை. செய்த தவரை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் சிறந்த மனிதராக மாறுவார்கள். எப்போதும் சரியாக நடந்து கொள்வதற்கு நாம் மெஷின் கிடையாது. மனிதர்கள். இதுபோன்று மீண்டும் நடக்காது என்று நாம் இந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும்’’ என்றார்.