ஹமாஸுக்கு ஆதரவாக பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 18-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசும்போது, இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
குட்டரெசின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் கூறுகையில், “ஹமாஸ் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்து கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்” என்றார். அதேபோல், ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இஸ்ரேல் மந்திரி கோஹன் கூறினார்.