ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 250 பேருக்கு கொரோனா பாதிப்பு!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் 152 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 250 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தொற்று காரணமாக இந்த மாத இறுதியில் விண்வெளியில் செலுத்தப்பட இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகள் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த வாரம் இஸ்ரோ தலைவராக பதவியேற்ற சோமநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools