Tamilசெய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் 16 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்பு அடைந்தது.

கடந்த 17-ந்தேதி திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்றது. கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் ரெயில் நிலையத்தை சுற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் மூலமும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமும் 3 நாட்களுக்கு பின்னர் பயணிகள் மீட்கப்பட்டனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்ட வாளத்தை சீரமைக்கும் பணி இரவு- பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரசை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதற்காக நெல்லையில் இருந்து டீசல் என்ஜின் ஸ்ரீவைகுண்டம் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் செந்தூர் எக்ஸ்பிரசை மீட்டு நெல்லை கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வழியாக நாசரேத் செல்லும் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தூர் எக்ஸ்பிரஸ் வருகிற 5-ந்தேதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை ரெயில் பாதைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் 5-ந்தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம்- நாசரேத் பகுதிகளையும் சீரமைக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

அது முடிவடைந்ததும் 6-ந்தேதி முதல் வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரையில் இருந்து வந்த ரெயில்வே என்ஜினீயர் கூறியதாவது:-

ரெயில்வே தண்டவாள பணிகள் சீரமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு- பகலாக நடைபெற்று வருகிறது. நெல்லை- செய்துங்க நல்லூர் இடையே ஓரிரு நாட்களில் தண்டவாளத்தை சீரமைத்த நிலையில் மற்ற இடங்களில் தண்டவாளங்கள் மட்டுமின்றி சாலை இணைப்புகளும் பாதிக்கப்பட்டது. இதனால் சீரமைப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டோம். இதனை கொண்டு செல்ல ரெயில்வே அதிகாரிகள் அங்குள்ள சாலைகளை சீரமைத்தனர்.

எனினும் ஆழ்வார்திரு நகரி மற்றும் நாசரேத் ரெயில் நிலையங்களுக்கு இடையே 120 மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பல நாட்களாக அந்த இடங்களுக்கு செல்வது எங்களுக்கு கடினமாக இருந்தது. அந்த பகுதி வழியாக கனரக வாகனங்களில் சீரமைப்பு பொருட்கள் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் தற்போது அங்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதிக்குள் இந்த பணி கள் முடிவடைந்து விடும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.