X

ஸ்மித், வார்னருக்கு இது கடினமான நேரம்! – ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர்

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடைக்காலம் மார்ச் மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இருவரும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பைக்கான அந்த அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னரை தேர்வு செய்யவில்லை எனில், அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் (ஆஸ்திரேலியா) வாய்ப்பை தேடுவோம்.

நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.