ஸ்மித்தை பாராட்டுவது போல பந்து வீச்சாளர்களையும் பாராட்ட வேண்டும் – ரிக்கி பாண்டிங்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதன்மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஸ்மித்தின் பேட்டிங்தான். அவர் மூன்று டெஸ்டில் ஐந்து இன்னிங்சில் மூன்று சதங்கள் உள்பட 671 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 134.20 ஆகும். ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க ஸ்மித்தின் பேட்டிங்தான் முக்கிய காரணம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு இணையாக பாராட்டை பெற ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தகுதியானவர்கள் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஸ்டீவ் ஸ்மித் என்ற ஒருவரால் மட்டும் ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கவில்லை. ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை பற்றிதான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த பந்து வீச்சு யூனிட்டும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள்.
இங்கிலாந்து பந்து வீச்சைவிட ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சு உயர்வாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை விட இங்கிலாந்தின் பந்து வீச்சில் அதிக அளவில் குறைபாடு இருந்தது. எந்தவித ஈவுஇரக்கமின்றி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தாக்குதலை நடத்தினார்கள்’’ என்றார்.