ஸ்பான்சர்கள் பங்கேற்க மறுத்தால் அவர்கள் முட்டாள் – ஐபிஎல் அணி உரிமையாளர் கருத்து
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டித் தொடர் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் வீரர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணிக்கும் முன்பு இருந்தே அவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடங்கி விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்து கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தொடர் முடியும் வரை வீரர்கள் மட்டுமின்றி, அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் தனித்தனி ஓட்டலில் தங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் எப்போதும் அணிய வேண்டும், பாதுகாப்பு வளையத்தை விட்டு எந்த காரணத்தை கொண்டும் வெளியே செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த விதிமுறைகளில் சிலவற்றை தளர்த்த வேண்டும் என்று அணிகள் சார்பில் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் அணியினர் இரவு விருந்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அமீரகத்தில் தனிமைப்படுத்துதல் நாட்களை குறைக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால் வழிகாட்டு நெறிமுறையின் இறுதி வடிவம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஐ.பி.எல். நிர்வாகத்தினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த அணியின் உரிமையாளர்கள் கூட்டத்துக்கு பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா கருத்து தெரிவிக்கையில், ‘அணியின் உரிமையாளர்களான எங்களுக்கு ஐ.பி.எல். போட்டி நடக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து தான் நாங்கள் அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இந்த தொடரின் போது சம்பந்தப்பட்ட யாராவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். ஐ.பி.எல். போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.
தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ‘ஸ்பான்சர்’களை அணுகுவது என்பது கடினமானதாகும். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கத்தை விட அதிகம் பேர் பார்க்கும் போட்டியாக அமையாவிட்டால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்ள தயார். எப்போதும் இல்லாத வகையில் இந்த போட்டி சிறப்பானதாக இருக்கும். இந்த ஐ.பி.எல். போட்டியில் ஸ்பான்சர்கள் பங்கேற்க மறுத்தால் அவர்கள் தான் முட்டாள். நான் ஸ்பான்சராக இருந்தால் நிச்சயம் இந்த போட்டிக்கு ஆதரவு அளிப்பேன்’ என்றார்.
இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியில் களம் காணும் அணிகள் வழிகாட்டு நெறிமுறையினை கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள உள்நாட்டு வீரர்களை மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு வார கால தனிமைப்படுத்தலில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வீரர்களை தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் அமீரகம் செல்ல முடிவு செய்திருந்தது. ஆனால் வழிகாட்டு நெறிமுறை இறுதி வடிவம் பெறுவதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அவர்களது பயண திட்டம் தள்ளிபோடப்பட்டது. சென்னை அணி வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.