ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் 3 முறை ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி, 4-வது முறையாக கடந்த மாதமும் ரெப்போ வட்டியைக் குறைத்திருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் போது சேர்த்துச் செலுத்த வேண்டிய வட்டியாகும்.
ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும். அந்தப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், பெரும்பாலான வங்கிகள் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மார்ஜினல் காஸ்ட் என்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் (செப்டம்பர் 10-ம் தேதி) அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது. அதுபோலவே எஸ்பிஐ வங்கி டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 10 முதல் 25 பைசா வரையில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.