X

ஸ்டெர்லைட் வழக்கு – உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது, நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், ஆலையின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.