தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாளாக போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
அப்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீ வைப்பு- கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை அடக்கியதால் கலெக்டர் அலுவலகம் தப்பியது.
வன்முறையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதானந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவினர் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு நடத்தினர். பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தனியார் சார்பிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று இந்த மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நாரிமன், நவின் சின்கா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீதிபதிகள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும். நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆலையை திறக்க விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு ஆலையை திறக்க மாநில பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை 3 வாரத்தில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை, தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டு இருப்பதாக இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வழக்கில் தனது மனுவை தமிழக அரசு மனுவுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.