ஸ்டெர்லைட் ஆலையில் 2 வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்த நிறுவனம் முடிவு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் திரவ நிலையிலான ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருவதாக, தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விருப்பம் தெரிவித்தபோது, தமிழக அரசு அனுமதி அளித்தால் 7 முதல் 14 நாட்களுக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் 2 வார காலத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மருத்துவ தர ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நோக்கத்துக்காக 1,000 டன் முழு உற்பத்தித் திறனையும் கிடைக்கச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் இதை தமிழகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் அனுப்பும் தளவாடங்களை எந்த வகையில் சிறப்பாக கையாளுவது என்பது குறித்து நிபுணர்களுடன் இணைந்து ஏற்கனவே விவாதித்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.