X

ஸ்டீவ் ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்க வேண்டும் – மேத்யூ வடே கருத்து

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. காயம் காரணமாக ஆரோன் பிஞ்ச் விளையாடவில்லை. இதனால் மேத்யூ வடே பகுதி நேர கேப்டனாக பணியாற்றினார்.

2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்றபோது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை இழந்தார். ஒரு வருடம் தடைக்காலமும், அதன்பின் ஒருவருடம் கேப்டன் பதவிக்கும் தடைவிதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

இதனால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஸ்மித்திடம் கேப்டன் பதவியை வழங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று மேத்யூ வடே தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் குறித்து மேத்யூ வடே கூறுகையில் ‘‘நாம் ஏராளமான சிறந்த கேப்டன்களை பெற்றுள்ளோம். கேப்டன் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது, ஆனால் நாம் ஸ்மித், ஹென்ரிக்ஸ் ஆகியோரை பெற்றுள்ளோம். இவர்கள் பிக் பாஷ் லீக்கில் கேப்டனாக இருந்தவர்கள். ஏராளமான அனுபவங்கள் கொண்ட வீரர்கள் உள்ளனர். சீனியர் வீரர்களிடையே ஆலோசனைகள் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

கேப்டன் வேலை என்னுடையது கிடையாது. பிஞ்ச் எங்களுடைய கேப்டன். அவர் சிறப்பாக விளையாடும்போது நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ஸ்மித் கேப்டனாக வேண்டும் என கருத்துகள் உள்ளன. அவர் நீண்ட காலமாக கேப்டனாக இருந்துள்ளார். மீண்டும் வாய்ப்பை பெற்றால், சிறப்பாக செயல்படுவார்’’ என்றார்.