ஸ்டாலினை விட ‘சாடிஸ்ட்’ வேறு யார் இருக்க முடியும் – பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து டெல்லியில் உள்துறை, நிதித்துறை, வேளாண்மைத்துறை, பெட்ரோலிய துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறை, வணிகத்துறை மந்திரிகளை சந்தித்து எந்தெந்த துறை மூலமாக நிவாரணம் பெறமுடியுமோ அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்ததும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை அந்தந்த துறை மந்திரிகளின் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கப்போவது பற்றி அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்-மந்திரிகள் வரவேற்கவில்லை. காங்கிரசுடன் கூட்டணி சேர இருந்த கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டன.

கருணாநிதி சொன்னார் என்றால் அவரது தலைமை எப்படிப்பட்டது என்பது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெரியும். கருணாநிதி செய்த விஷயங்களை ஒப்பிட்டு ஸ்டாலின் செய்யப்போவதாக சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அப்படி காங்கிரஸ் கட்சி சொல்லச் சொன்னதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

‘சாடிஸ்ட்’ என்ற வார்த்தை யாருக்கு பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது சீக்கிய சகோதரர்களை தேடிக் கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு ‘சாடிஸ்ட்’ என்று சொல்லலாமா? ‘சாடிஸ்ட்’ என்பது காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும். ஸ்டாலினை விட ‘சாடிஸ்ட்’ வேறு யார் இருக்க முடியும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த துயர சம்பவங்களை பேசலாமா? தயவு செய்து ஸ்டாலின் நாகாக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக்கொள்வீர்கள். சாடிஸ்ட் என்ற வார்த்தை கண்ணாடியை பார்த்து துப்பியதற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools