சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கினார். ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ஆர்தர் பகுதியில் உள்ள சிறைக்கு சென்று தனது மகனை ஷாருக்கான் சந்தித்தார்.
ஷாருக்கான் சிறைக்கு சென்று திரும்பியதும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மும்பை மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கான் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது ஷாருக்கான் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும், ஷாருக்கானிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் போதைபொருள் தடுப்புப்பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில் ‘‘என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை எடுப்பதற்காக ஷாருக்கானின் வீட்டிற்கு சென்றனர். மன்னாட் வீட்டில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை’’ என்றார்.
‘‘ஷாருக்கான் வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நடைமுறை தேவையின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கு சென்றிருந்தோம்’’ என என்.சி.பி. டிடிஜி அஷோக் முத்தா ஜெயின் தெரிவித்துள்ளார்.