ஷாருக்கான் பட பணிகளை தொடங்கிய இயக்குநர் அட்லீ
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.
இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்திய தகவல் படி இயக்குனர் அட்லீ, தற்போது ஷாருக்கான் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் அட்லியின் மனைவி பிரியா, தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இயக்குனர் அட்லீ, ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனது உதவி இயக்குனர் குழுவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் ஷாருக்கான் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லீ இறங்கியிருப்பது தெரிகிறது.