Tamilசெய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் மத்திய ஜெய்சங்கர் சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும் கலந்து கொள்கிறது.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு அமைப்பு ஒன்றை நிறுவின.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் 2005-ம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்து வந்தது. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடுகளாகி விட்டன.

இந்த அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடக்கிறது. மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார். நேரடியாகவும், காணொலி முறையிலும் நடக்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் உயர்மட்டக்குழு ஒன்று பங்கேற்கிறது. இந்த குழுவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். காணொலி முறையில் பங்கேற்கும் அவர், மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையும் நிகழ்த்துகிறார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக நேரில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் ஏற்கனவே துஷான்பே சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே சீன வெளியுறவு மந்திரி வாங் யியை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

இதேபோல், ஈரான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும் அவர் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் நேரில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஆகியோரும் துஷான்பே செல்வார்கள் என தெரிகிறது.