தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக இப்போராட்டம் நடைபெறுகிறது.
ஆனால், டெல்லியில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, ஷாகீன் பாக் காலி செய்யப்பட்டு, போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தலைவவர்கள் கூறி வருகிறார்கள். எனவே, டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தால், ஷாகீன் போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, பிப்ரவரி 8-ம் தேதிக்கு பிறகு ஷாகீன் பாக் காலி செய்யப்படுவதற்கான அறிகுறிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒவைசி, ‘போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாகீன் பாக் இடமானது ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம். இது நடக்கக்கூடும். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக மந்திரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தீவிரமயமாக்குவது யார்? என்பதற்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்’ என்றார்.
என்பிஆர், என்ஆர்சி குறித்து தொடர்ந்து பேசிய ஒவைசி, ‘2024ம் ஆண்டு வரை என்.ஆர்.சி செயல்படுத்தப்படாது என்று அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் என்பிஆர்-க்கு 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்? நான் ஒரு வரலாற்று மாணவனாக இருந்ததால் இதை உணர்கிறேன். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினார், அதன்பிறகு, யூதர்களை விஷவாயு அறைக்குள் தள்ளினார். நமது நாடு அந்த வழியில் செல்வதை நான் விரும்பவில்லை’ என்றார்.