Tamilசெய்திகள்

ஷவரில் குளிப்பதை தவிருங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி 133 மில்லியன் கன அடி, புழல் 37 மி.க.அடி, சோழவரம் 4 மி.க.அடி, செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி உட்பட 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இதில் சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.

இருந்தாலும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் தினசரி தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்கு தேவைப்படும் தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஷவர்பாத்தில் குளிப்பதை ஆனந்தமாக கருதுகின்றனர். அதில் குளித்தால் தான் குளித்ததற்கான திருப்தியே ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஷவர்பாத்தில் குளிப்பதற்கும், பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

ஷவர்பாத்தை திறந்தால் நம்மை நாமே மறந்து ஆனந்த குளியலில் மூழ்கும்போது 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால் சென்னையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்பாத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பின்னர் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது. ஆனால் இந்திய முறை கழிப்பறைகளை (இந்தியன் டாய்லட்) பயன்படுத்தும்போது 1 லிட்டரில் சுத்தம் செய்துவிட முடியும். எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சற்று ஓய்வு தர வேண்டும்.

சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை பயன்படுத்தி சிலர் தங்கள் கார்களை தினசரி கழுவுகின்றனர். இதன் மூலம் 50 முதல் 70 லிட்டர்வரை தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. சிலர் நூறு லிட்டர்வரை பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீருக்காக பயன்படுத்துபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை கார்களை ஈரத்துணி மூலம் துடைத்து விடலாம்.

வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அதேபோல் வீட்டு முற்றம் தெளித்து கோலம் போடுவதற்கும், வீட்டை கழுவுவதற்கும் உப்பு கலந்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *