ஷகிப் அல் ஹசன் விவகாரத்தால் அணியின் திறன் குறையும் – வங்காளதேச பயிற்சியாளர்

இந்தியாவுக்கு வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி வங்காளதேச அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு காற்றில் மாசு அதிகரித்து ஒரே புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் சில வீரர்களும், தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ, சுழற்பந்து வீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி ஆகியோரும் பயிற்சியின்போது சுவாச கவசம் அணிந்து இருந்தனர்.

பின்னர் பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வங்காளதேச அணியின் மிக முக்கியமான வீரராக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளங்கினார். அணியில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்போது ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் (சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டதை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டு தடை) அது சில வீரர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர் தவறு செய்து விட்டார். அதற்குரிய பலனை அனுபவிக்கிறார். இருப்பினும் ஷகிப் அல்-ஹசன் விவகாரம் அணியின் செயல்பாட்டை நிச்சயம் பாதிக்கும். அவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆனால் அதை மறந்து விட்டு நாங்கள் இந்தியாவுக்கு எதிரான தொடர் மீதும் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தனிப்பட்ட முறையில் ஷகிப் அல்-ஹசன் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் மீது வீரர்கள் இடையே மிகுந்த மரியாதை இருக்கிறது. பெரும்பாலும் அவர் பேட்டிங்கில் 3-வது வரிசையில் களம் இறங்குவார். தொடக்கத்திலேயே பவுலிங் செய்வார். அல்லது தொடக்க கட்ட பந்து வீச்சை மாற்றும் போது அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு 20 ஓவர் ஆட்டத்திலும் 4 ஓவர்களை கச்சிதமாக வீசக்கூடிய திறமைசாலி. எங்கள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே அவருக்கு பதிலாக பேட்ஸ்மேனை சேர்ப்பதா அல்லது பந்து வீச்சாளரை சேர்ப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் அவரை போன்று பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தக்கூடிய வீரர் கிடைப்பது மிகவும் கடினம். சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.

டெல்லியில் நிலவும் காற்று மாசு விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். கடந்த முறை இங்கு இலங்கை அணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோது காற்று மாசுபாட்டினால் தடுமாறியதை அறிவோம். வங்காளதேசத்திலும் கொஞ்சம் காற்று மாசு பிரச்சினை உள்ளது. அதனால் எங்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இல்லை. வெறும் 3 மணி நேரம் மட்டுமே களத்தில் நாங்கள் விளையாடப்போகிறோம். அதனால் எளிதாகத் தான் இருக்கும். கண்ணில் எரிச்சலோ அல்லது தொண்டையில் வலியோ ஏற்படலாம். அதனால் சமாளித்துக் கொள்ளலாம். யாரும் செத்து விடப்போவதில்லை.

என்றாலும் போட்டிக்கு உகந்த சீதோஷ்ண நிலை இங்கு இல்லை. இரு அணிகளும் ஒரே மாதிரியான சூழலில் தான் விளையாடப்போகின்றன. ஆட்டம் தொடங்கியதும் அது பற்றி புகார் சொல்வதற்கு எதுவும் இருக்காது.

இவ்வாறு டொமிங்கோ கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news