Tamilசினிமா

வைரலாகும் சிம்புவின் ‘பத்து தல’ டீசர்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.