X

வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு – தண்ணீர் திறந்துவிட தயாராக இருக்கும் அதிகாரிகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டியதும் முதல் எச்சரிக்கையும், 68 அடியை எட்டியதும் 2-ம் எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் நேற்று 69 அடியை நெருங்கியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கமாக அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியதும், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். ஆனால் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக நாளை (10-ந்தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக உபரி நீரை வெளியேற்றாமல் நீர் மட்டத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 2705 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.

அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால் இன்று எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஏற்கனவே வைகை கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 2230 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4352 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.20 அடி, வரத்து 232 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 379 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 127 அடி. அணைக்கு வரும் 243 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.

பெரியாறு 7, தேக்கடி 14.2, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 7.8, சண்முகாநதி அணை 21.6, போடி 22, வைகை அணை 25.6, மஞ்சளாறு 32, சோத்துப்பாறை 32, பெரியகுளம் 21, வீரபாண்டி 42.5, அரண்மனைப்புதூர் 23.2, ஆண்டிபட்டி 76.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags: tamil news