Tamilசெய்திகள்

வைகுண்ட ஏகாதசி விழா! – இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது

பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.

நேற்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை.

இன்று (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.

இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *