X

வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளுக்கு 8 பக்கம் கடிதம் எழுத மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 23வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்றும், பிரதமரின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகளின் நலன் காத்தல் என்றும் கூறி உள்ளார்.

கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

இந்த சீர்திருத்தங்களை பல விவசாய சங்கங்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளன. வேளாண் மந்திரி என்ற வகையில், விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமை ஆகும்.

விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமையாகும். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வேளாண்மந்திரியின் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், வேளாண் மந்திரியின் அறிக்கையை அனைவரும் படிக்க வேண்டும், நாட்டு மக்கள் இதனை அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.