வேளாங்கண்ணி ஆரோக்கிய மாத பேராலய ஆண்டு விழா இன்று தொடங்குகிறது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

இந்த ஆலயம் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு. மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக மக்கள் இன்றி வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

27 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், 4 டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சுகாதார துறையின் மூலம் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 டாக்டர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 71 செவிலியர்கள் உள்ளிட்ட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருவிழாவையொட்டி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் 12 இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools