வேளச்சேரி- பெருங்களத்தூர் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டு உள்ளது. இம்மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய நான்கு பாலப்பகுதியை உடையது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்திற்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு சென்னை வழித்தட போக்குவரத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனிவாசராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு சென்னை பாலப்பகுதி 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாகும். இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதியினைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools