வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவி தொகை – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, அஜய்மக்கான் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘யுவ ஸ்வாபிமான்’ திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.7,500-ம் உதவித் தொகையாக வழங்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வீடுகளுக்கு 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 300 முதல் 400 யூனிட்டுகள் வரை 50 சதவீத கட்டணமே வசூலிக்கப்படும். குடிநீர், மின்சாரம் இரண்டையும் வீணாக்காமல் சேமிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 100 இடங்களில் பெண்களே நடத்தும் மகிளா கேண்டீன் நிறுவி ரூ.15-க்கு சலுகை விலையில் உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தகர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கப்படமாட்டாது. அவர்களின் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட மாட்டாது. அரசு கல்வி நிறுவனங்களில் நர்சரி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை இலவச கல்வி வழங்கப்படும்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவ மனைபோல் புதிதாக 5 மருத்துவமனைகள் நிறுவப்படும்.
டெல்லியில் அதிக எண்ணிக்கையில் மின்சார பஸ்கள் விடப்படும். மின்சார ஆட்டோ ரிக்ஷாக்கள், மின்சார ரிக்ஷாக்கள் இயக்கப்படும். நகரின் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி பஸ் நிலையங்கள் கட்டப்படும். டெல்லியை பசுமை நகரமாக்க பட்ஜெட்டில் 25 சதவீத தொகை ஒதுக்கப்படும்.
குடிசைவாசிகள் வீடு கட்டிக் கொள்ள 25 சதுர மீட்டர் இடம் இலவசமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.