வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் – இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
ஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று காலை மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. முகவர்கள் மட்டும் பங்குகொள்ளும் இந்த வாக்குபதிவில் வாக்குபதிவு எந்திரத்தின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது, அதை தொடர்ந்து பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். தொடர்ந்து உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும்.
வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர்.
இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலை கண்காணிக்க பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி காதே சுதம் பண்டரிநாத், சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர்களாக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்.சுக்லா, போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆதித்யகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் தொகுதியில் தங்கி இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வி.வி.பாட் கருவிகளும், வாக்கு எண்ணிக்கை மையமான ராணிபேட்டையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்.
9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். யாருக்கு வெற்றி என்பது அப்போது தெரிந்துவிடும்.