வேலூர் தொகுதியில் நாளை மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

பண பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களையே பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. களம் இறக்கியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் ‘இரட்டை இலை’ சின்னத்தில் களம் காண்கிறார். அதேபோல, தி.மு.க. சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் வேலூரில் முகாமிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர்.

அதேபோல தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்ய அக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேலூரில் குவிந்துள்ளனர். வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குள் உள்ளடங்கிய 6 சட்டசபை தொகுதிகளிலும் குழு அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேலூர் பாராளுமன்ற தொகுதி களைகட்டி இருக்கிறது.

தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வேலூரில் இறுதிகட்ட பிரசாரம் சூடுபிடித்து இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டசபை தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் சட்டசபை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதேபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மாலை 4 மணிக்கு குடியாத்தம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்தி சவுக், குடியாத்தம் (பஸ் நிலையம்), பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

நாளை (சனிக்கிழமை) வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news