வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை – துரைமுருகன் காட்டம்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பெண்ணிடம் முதல்-அமைச்சர் பணம் கொடுப்பதை டிவியில் பார்த்தேன். அதை பற்றி கேட்க தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது.
தேனியில் ரூ.2 ஆயிரம் கொடுத்ததை பார்த்தோம். இதுவும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எங்கள் மீது எவ்வித நேரடி குற்றசாட்டும் இல்லாமல், எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒரு சதி.
தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
நாங்கள் வெற்றி பெற்றால் மோடி அரசும் போய்விடும். எடப்பாடி அரசும் போய்விடும். அ.தி.மு.க. மீதான குற்றசாட்டுகள் குறித்து மற்ற நடவடிக்கைகளை பிறகு பார்த்து கொள்ளலாம். வழக்கறிஞர்களிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.