வேகமாக பரவும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3.45 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 4.67 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்டதை தேசிய தொற்று நோய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. உருமாறிய புதிய வகை வைரஸ் ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படுகிறது.
உலக சுகாதாரஅமைப்பு இந்த புதிய வகையான ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போட்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளது.
மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது.
விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அரசின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகள், மருத்துவர்கள், நிபுணர்கள் புதிய வைரஸ் குறித்து தெரிவித்த ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
விமான சேவைக்கு தடை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விமான பயணத்துக்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இந்தியாவுக்கு வந்த பின் பரிசோதனையை தீவிரப்படுத்துதல் குறித்தும் பேசப்பட்டது.
ஆங்காங், இஸ்ரேலில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் தடுப்பூசி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2-வது டோஸ் செலுத்துவதில் பல்வேறு மாநிலங்களில் மந்தநிலை காணப்படுகிறது. இதை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே புதிய வகை கொரோனா பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.